பிடித்ததும்… பிடிக்காததும்…
தங்கதமிழன் கவிதைகள் 

நான் பிடித்திருப்பது

எனக்கு பிடித்தது அல்ல…

சிறுவயதில் எனக்கு பிடித்ததை வாங்கித் தர

அம்மாவுக்கும் ஆசைதான்…

ஆனால் அவள் கைகளில் ஆசை இருந்தது,

அவள் பையில் காசில்லை…

எனக்கும் பிடித்திருந்தது…

அவளுக்கும் பிடித்திருந்தது…

ஆனால் எங்கள் காதல்

அவளது அம்மா அப்பாவுக்கு பிடிக்கவில்லை…

அதனால் அவள் கிடைக்கவில்லை…

என் கண்களுக்கு பிடித்திருந்த அழகுகள்

பழகிப் பார்த்தபின்

மனசுக்கு பிடிக்காமல் போயின…

எனக்கு பிடித்த விளையாட்டு…

எனக்கு பிடித்த பாடல்…

எனக்குப் பிடித்த உணவுகள்…

இவைகளை யாவது அடிக்கடி ரசிக்கலாம் என நினைத்தேன்…

ஆனால் மருத்துவரின் வார்த்தை

என் ஆசைகளுக்கு எல்லை கோட்டாய் நின்றது…

“இது உனக்கு ஆபத்து…” என்றார்கள்…

அதன் பிறகு

பிடித்த உணவும்

பிடிக்கக் கூடாத ஒன்றாய் மாறிவிட்டது…

இப்போது

எனக்குப் பிடித்த பாடலை கூட

நான் கேட்க முடியவில்லை…

அது நினைவுகளை கிளறுகிறது…

நினைவுகள் நெஞ்சை கிழிக்கிறது…

எனக்குப் பிடித்தது எதுவும்

வாழ்வில் பிடிக்க முடியாமலே

விரல்களுக்குள் மணல் போல

சரிந்து போய்விட்டது…

நான் என்ன செய்ய…?

பிடித்தவைகளை யாரும் தரவில்லை…

அதனால் தான் பிடித்திருக்கிறேன்

பிடிக்காதவைகளை…

நீங்கள் எப்படியோ

நானும் அப்படித்தான்…

பிடிக்கவே இல்லை…

ஆனாலும் பிடித்திருப்பதாக சொல்லிக்கொள்கிறேன்…

ஆம்…

பிடித்திருப்பது கிடைப்பதில்லையே…

அதனால்தான்

பிடிக்காததை பிடித்துக் கொண்டு

வாழ்வை சமாதானப்படுத்திக் கொள்கிறேன்…

பிடிக்காதவைகளால் பிடிக்கப்பட்டவன் நான்…

ஒரு கையில் சிகரெட்டும்…

மற்றொரு கையில் மது கோப்பையும்…

பிடித்தது இல்லாத வாழ்க்கையில்

பிடிக்காததே

என் துணையாகி விட்டது…


தங்கதமிழன் 


Also read: