உயர்ந்த தொழிலா? ஏமாற்று நாடகமா? - சமூகத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ‘தங்கத்தமிழன்’ குறும்படத்தின் சிந்தனைச் பார்வை!
![]() |
| தூய்மை பணியாளர் |
கோடி கோடியாய் செலவு செய்து பிரம்மாண்டமாக எடுக்கப்படும் திரைப்படங்கள் சொல்லத் தவறிய, அல்லது சொல்ல யோசிக்கும் மிக முக்கியமான ஒரு சமூக வலியை, மிகச் சிறிய பட்ஜெட்டில் யாரும் சிந்திக்காத கோணத்தில் தைரியமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது ‘தங்கத்தமிழன்’ யூடியூப் சேனல்.
தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும், தெருக்களிலும், பேருந்துகளையும் கூட சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களின் உழைப்பு இன்றியமையாதது. ஆனால், நம் சமூகத்தில் ஒரு கேள்வி நெடுங்காலமாக எழுப்பப்படுகிறது: "குப்பை கூட்டுவதும், ஊரைச் சுத்தம் செய்வதும் உயர்வான தொழிலா? தாழ்வான தொழிலா? சாக்கடை அள்ளுவது உயர்வான தொழிலா? தாழ்வான தொழிலா?"
இந்தக் கேள்வியை மட்டுமே மையமாகக் கொண்டு, ‘தூய்மை’ என்ற தலைப்பில் நான் இயக்கிய குறும்படம் ஒரு விருதுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் படத்தைப் பார்த்த ஆசிரியர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் பாராட்டினர். "இது விருதுக்கான தகுதியைக் கொண்ட கதைதான்; ஆனாலும், எடிட்டிங் மற்றும் டப்பிங் போன்ற தொழில்நுட்பக் குறைபாடுகளால் இந்தப் படம் தேர்வாகவில்லை. இருப்பினும், உங்கள் கதை மனதை உலுக்கும் மிகப்பெரிய சிந்தனையையும் வலியையும் தூண்டுகிறது. இந்தக் குறும்படத்தை சரியான முறையில் இயக்கினால், நீங்கள் தமிழகத்தில் ஒரு பெரிய இயக்குனராக வர முடியும்" என்று அவர்கள் மனதாரப் பாராட்டினர். அந்தப் பாராட்டு எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்ததுடன், இந்தச் சிந்தனையை ஒரு கட்டுரையாக உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆசையை ஏற்படுத்தியது.
சாக்கடை அள்ளுவது இழிவான தொழிலா?
இந்த உலகத்தில் எந்தத் தொழிலும் தாழ்வானது அல்ல; உழைப்பே உயர்வானதுதான். அதிலும் நம்மைச் சுற்றியுள்ள அழுக்கை அகற்றும் இந்தச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியும், வீதிகளைப் பெருக்குவதும் மிக உயர்ந்த தொழில்தான். ஏனென்றால், இப்படிப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் உழைப்பால்தான், கோவிட் (COVID) போன்ற கொடிய பெருந்தொற்றுக் காலத்தில்கூட நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால், நம் சமூகத்தில் ஒரு முரண்பாடு உள்ளது. பத்தாம் வகுப்பு, பன்னிராம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்டத்திலும் மாநிலத்திலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளிடம் ஊடகங்களும் பத்திரிகைகளும் பேட்டி எடுக்கும்போது, அவர்கள் கலெக்டராக, டாக்டராக, இன்ஜினியராக, வக்கீலாக வரப்போவதாகப் பெருமையுடன் கூறுவார்கள். ஆனால், இதுவரை எந்த ஒரு மாணவனாவது "நான் படித்துவிட்டுச் சாக்கடை சுத்தம் செய்யப் போகிறேன்" என்று கூறியதுண்டா?
ஏன் இந்த நிலை? சாக்கடை சுத்தம் செய்வது இழிவான தொழிலா? படித்தவர்கள் யாரும் இந்தத் தொழிலுக்கு வர மறுப்பது ஏன்?
ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கண்துடைப்பு நாடகம்!
ஆண்டுக்கு ஒருமுறை, சில பிரதமர்களும் முதலமைச்சர்களும் விளக்குமாறு கொண்டு தெருவைக் கூட்டுவது போலப் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. அன்றைய ஒரு நாளுக்கு மட்டும் அந்தத் தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டு விழா நடத்தி, 5 கிலோ அரிசியும் ஒருவேளை சோறும் கொடுப்பதோடு அரசாங்கமும் சமூகமும் தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறது.
இதைத்தான் என்னுடைய குறும்படத்தின் மையக்கருவாக அமைத்தேன். உயர்ந்த தொழில் என்று வாயால் மட்டுமே சொல்லப்படும் இந்தத் தொழிலைச் செய்யும்படி, படித்து உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டிய மாணவ-மாணவிகள் சிலரைக் கதை களத்தில் கடத்திச் செல்லப்படுவது போலவும், அவர்கள் மூலம் சமூகம் எதிர்கொள்ளும் அதிர்ச்சியைப் பேசுவதும்தான் கதை!
வாய்ச்வார்த்தைப் பாராட்டு தீர்வாகாது!
நம் குறும்படத்தில் பேசப்படும் மிக முக்கியமான கேள்வி இதுதான்: "ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வந்து, 'சாக்கடை சுத்தம் செய்வது உயர்வான தொழில்' என்று வாய் கிழியப் பேசுகிறீர்களே... அப்படியானால் ஏன் இதுவரை எந்த மாணவனும் தானாக முன்வந்து இந்தத் தொழிலைச் செய்ய முன்வரவில்லை? ஏனென்றால், இது தாழ்வான தொழிலாகவே எல்லாராலும் உணரப்படுகிறது!"
"அப்படி இது உயர்ந்த தொழில் என்றால், ஆண்டுக்கு ஒரு முறை வந்து மேடையில் பாராட்டுவதோடு கடமை தீர்ந்துவிடாது. அந்தத் தொழிலாளர்களுக்கு உரிய உயரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும். நாளுக்கு 200 ரூபாயோ, 300 ரூபாயோ கூலியாகக் கொடுத்துவிட்டு, அவர்களைத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே செய்யக்கூடியவர்களாக ஒதுக்கி வைத்துவிட்டு, வாயால் மட்டும் 'இது உயர்ந்த தொழில்' என்று கூறுவது பச்சைப் பச்சையான ஏமாற்று வேலை!"
தமிழகத் திரைத்துறையில் இதுவரை யாருமே பேசத் துணியாத இந்தச் சமூக உண்மையை இந்தக் குறும்படம் உரக்கப் பேசுகிறது. ஆசிரியர்கள் பாராட்டியது போல, தொழில்நுட்பக் குறைகளைச் சரிசெய்து, இன்னும் தெளிவான முறையில் இதைப் போன்ற படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதே எனது லட்சியம்.
இந்தச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் இந்தப் பயணம் தொடரும்!
— இயக்குநர் தங்கத் தமிழன்


0 கருத்துகள்